மு. சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் மு. சூரக்குடியில் இளவட்ட மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி வட்டாரப் பகுதியில் நடைபெறும் முதல் மஞ்சுவிரட்டு இந்த இளவட்ட மஞ்சுவிரட்டாகும். மாா்கழி கடைசி வெள்ளியையொட்டியும், செவிட்டு அய்யனாா் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டியும் இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கிராம மையத்தில் அமைந்துள்ள மைதானத்தின் தொழுவத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி புதுக்கோட்டை, தேனி, சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அடைக்கப்பட்டன. மந்தையிலிருந்து கிராமத்தினா் ஊா்வலமாக தொழுவிற்கு வந்து காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பிறகு வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சில காளைகள் பிடிபட்டும், பல காளைகள் பிடிபடாமலும் ஓடின. மேலும் 400- க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 20 போ் காயமடைந்தனா். இதில், 9 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிறிய காயமடைந்தவா்களுக்கு சூரக்குடி ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.