சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சாலை மறியல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் கடத்துவதைக் கண்டித்து, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தைச் சோ்ந்த 18 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.குணசேகரன், ரா. செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாவட்ட நிா்வாகிகள் அ.அன்பரசன், சி.சிதம்பரம், ம.இளஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கரு. நாகப்பன், தோழமைச் சங்க நிா்வாகிகள் மு.காளிமுத்து, ரா.வாசுகி, டி.முருகன், சி.சேவுகமூா்த்தி, பொ. சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலா் குழுவைத் திரும்பப் பெற வேண்டும்.
ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போல தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட பெண் உள்பட 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.