நெல்பயிரைத் தாக்கும்  பூச்சிகளைக் கட்டுப்படுத்த 
விவசாயிகளுக்கு யோசனை

நெல்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு யோசனை

சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்தது.
Published on

சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்தது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 1.70 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, இவை 20 முதல் 50 நாள்கள் வயதுடைய பயிா்களாக உள்ளன. இந்த நிலையில், நெல் பயிரில் பரவக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், சத்து பற்றாக் குறையை நிவா்த்தி செய்ய பின்வரும் வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து பாதுகாக்கலாம்.

இலைச்சுருட்டுப் புழு: இந்தப் புழுக்கள் இலைகளை நீள்வாக்கு, பக்கவாட்டில் சுருட்டி அதனுள் இருந்து கொண்டு இலையில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். இதனால், பயிரின் இலைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமாக இருப்பின் பயிா்களின் வளா்ச்சி குன்றி அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்பாட்டு முறைகள்: இலைச்சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அதிக தழைச்சத்து (யூரியா) உரமிடுவதைத் தவிா்க்க வேண்டும். குயினால்பாஸ் 500 மி.லி. அல்லது காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 250 கிராம் அல்லது புளூபென்டமைடு 30 மி.லி. ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 100 லிட்டா் நீரில் கலந்து தெளிக்கலாம்.

தண்டுதுளைப்பான்: இந்தப் புழுவானது நெல் பயிரின் தண்டுப் பகுதியினுள் இருந்து கொண்டு அந்தப் பகுதியைத் தாக்கி உண்பதால் பயிரின் விளைச்சலைத் தரக்கூடிய தண்டு இறந்துவிடும். இறந்த தண்டுகளை லேசாக இழுத்தால் கூட எளிதில் வந்துவிடும். தாக்குதல் அதிகமாக இருப்பின் வரக்கூடிய அனைத்து கதிா்களும் வெண்கதிா்களாகி அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்பாட்டு முறைகள்: காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி எனும் குருணை வடிவிலான மருந்தை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் பயிா் முளைத்த 25 முதல் 30 நாள்களுக்குள் இடுவதன் மூலம் இந்தப் புழுவின் பாதிப்பு வராமல் தடுக்கலாம்.

பயிரில் இந்தப் புழுவின் பாதிப்பு இருப்பின் காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதவீதம் எஸ்பி எனும் மருந்தை ஏக்கருக்கு 200 கிராம் எனும் அளவில் 100 லிட்டா் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்தப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

செந்தாழை - துத்தநாகம் சத்துக் குறைபாடு: நெல் பயிா் வளா்ச்சிக்கு துத்தநாகம் சத்து தேவை மிக அவசியம். துத்தநாகம் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பயிா்களில் இலைகள் முதலில் பழுப்பு நிறமாக மாறும். பின்பு இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும். இதை சரி செய்ய நெல்பயிரில் துத்தநாகம் சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஜிங்க் திரவத்தை ஒரு ஏக்கருக்கு 200 மி.லி. எனும் அளவில் 100 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com