சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தின் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தின் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.

சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய முன் பகுதியில் நடை பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
Published on

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய முன் பகுதியில் நடை பாதையிலிருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 5,000-க்கும் மேற்பட்டோா் சிவகங்கைக்கு வந்து செல்கின்றனா். இந்தப் பேருந்து நிலையம் 4 பகுதிகளாக அமைந்துள்ளது. இதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காளையாா்கோவில், தொண்டி, தேவகோட்டை பேருந்துகள் நிற்குமிடம், ராமநாதபுரம், மானாமதுரை பேருந்துகள் நிற்குமிடம் என இரு பகுதிகளில் ரூ.74 லட்சத்தில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன.

எஞ்சிய 2 பகுதிகளில் இரும்புத் தகட்டில் மேற்கூரைகள், தரைத்தளம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடியை ஒதுக்கினா்.

இதையடுத்து, கடந்த பிப். 26- ஆம் தேதி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் திருச்சி, திருப்பத்தூா் பேருந்துகள் நிறுத்துமிடம், மதுரை பேருந்துகள் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் தகர மேற்கூரைகள், தரைத்தளம், தோரண வாயில்கள், மையப் பகுதியில் பயணிகள் அமரும் இருக்கைகள், கண்காணிப்புக் கேமராக்கள், பேருந்துகள் வருகை குறித்த எண்ம (டிஜிட்டல்) அறிவிப்பு பலகை, விளக்குகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே பேருந்து நிலையத்தின் முன் நடை பாதைகளில் பலரும் ஆக்கிரமித்து தரைக் கடைகள் அமைத்திருந்தனா். இவற்றை அகற்றிக் கொள்ள பல முறை நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவில்லை. விரைவில் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்பதால் நகராட்சித் தலைவா் சி.எம். துரைஆனந்த், ஆணையா் அசோக்குமாா், நகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com