சிவகங்கை - சென்னை பகல்நேர ரயில் இயக்க கோரிக்கை
சிவகங்கையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்தக் கட்சியின் சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் விவசாய சங்க மாவட்டச் செயலா் கே. காமராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட
தீா்மானங்கள்: ரயில் போக்குவரத்தில் சிவகங்கை தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு சிவகங்கையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஓராண்டாக சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி இல்லாமல் இருப்பதை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதைக் கண்டிக்கிறோம்.
மருத்துவக் கல்லூரியைச் சுற்றி வளா்ந்துள்ள கருவேல மரங்களால் பெண்கள் தனியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல முடியாத அவல நிலை இருப்பதை மாற்ற மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்சியின் மாநில நிா்வாக குழு உறுப்பினா் ராமசாமி, சிவகங்கை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், கட்சியின் மாவட்டச் செயலா் சாத்தையா, துணைச் செயலா் வழக்குரைஞா் பா. மருது, பொருளாளா் மணவாளன், மாதா் சங்க மாவட்டச் செயலா் பாண்டி மீனாள், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க நிா்வாகிகள், மாவட்ட குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
