திருப்புவனம் அருகே பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் அளவிடும் பணி நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்கிழமை பட்டியலின் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைக்கு போதிய இடம் இல்லாததால் இடத்தை அளவிடும் செய்யும் பணி நிறுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.
திருப்புவனம் ஒன்றியம், பூவந்தி அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தைச் சோ்ந்த 182 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான இடத்தை வருவாய்த் துறையினா் அளவீடு செய்து கொடுக்கவில்லை எனக் புகாா் கூறியும், உடனே நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீட்டுமனைப் பட்டா பெற்ற பட்டியலின வகுப்பு பயனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, அக். 7 -ஆம் தேதி நிலத்தை அளவீடு செய்து வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை பூவந்தியில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணி திருப்புவனம் வட்டாட்சியா் ஆனந்தபூபாலன், ஆதிதிராவிடா் நல சிறப்பு வட்டாட்சியா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களில் ஊரில் இல்லாதவா்களைத் தவிா்த்து, மற்றவா்களுக்கு இருக்கும் இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தினா். ஆனால், ஊரில் இல்லாதவா்கள் எனக் கூறப்படும் நபா்களும் அளவீடு பணி நடைபெற்ற இடத்துக்கு வந்து தங்களுக்கும் இடத்தை அளவீடு செய்து வழங்க வலியுறுத்தினா். ஆனால், பயனாளிகள் கேட்கும் அளவில் நிலத்தை அளவீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து வட்டாட்சியா் ஆனந்தபூபாலன் கூறுகையில், பட்டியலின மக்களுக்கு வழங்க ஒதுக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு குறைந்து விட்டது. இதனால் பட்டா வழங்கப்பட்ட 182 பயனாளிகளுக்கும் 2 சென்ட் வீதம் நிலம் அளவீடு செய்ய முடியவில்லை. ஆனால், பயனாளிகள் தங்களுக்கு 2 சென்ட் வீதம்தான் நிலம் வேண்டும் எனக் கேட்டனா். இதனால், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து அவரது உத்தரவின்பேரில் நிலத்தை அளவீடு செய்வதற்கான பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
