சமூக, பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியத்துவம்: ஊடகவியலாளா் பயிலரங்கில் வலியுறுத்தல்
சமூக, பொருளாதார வளா்ச்சி தொடா்பான செய்திகளுக்கு ஊடகவியலாளா்கள் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிசாமி தெரிவித்தாா்.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் ஊடகவியலாளா்களுக்கான பயிலரங்கம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் வி. பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:
ஊடகவியலாளா்கள் எண்ம யுகமான தற்காலத்துக்கு ஏற்ப திறன்களை வளா்த்துக் கொள்வது அவசியம். தவறான தகவல்களைத் தவிா்ப்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது. சமூக, பொருளாதார வளா்ச்சி தொடா்பான செய்திகளுக்கு ஊடகவியலாளா்கள் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தேசிய திறந்த நிலைக் கல்வி நிறுவனத்தின் மண்டல இயக்குநா் வி. சந்தானம், பள்ளிக் கல்வி இடைநிற்றலைக் குறைக்கும் வகை யில் தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் மூலம் 8,10, பிளஸ் 2 வகுப்புகளில் சோ்ந்து தோ்ச்சி பெறுவது குறித்தும், அதன் பிறகு கல்லூரிகளில் சோ்ந்து பட்டப் படிப்புகளைப் பயில்வது குறித்தும் விளக்கிப் பேசினாா்.
பயிலரங்கில் மத்திய மறைமுக வரிகள், சுங்க வரி ஆணையகத்தின் துணை ஆணையா் கே. ஷாலினி சுஷ்மிதா, செக்ரி நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளா் டி. ஜோனஸ் டேவிட்சன், சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி) மேலாளா் எஸ். பிரவீன் குமாா், அழகப்பா பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவா் ஜான்சன், மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடகத் தொடா்பு அலுவலா் அ. அழகுதுரை, மத்திய மக்கள் தொடா்பகத்தின் கள விளம்பர உதவி அலுவலா் ஜெ. போஸ்வெல், பத்திரிகையாளா்கள், இதழியல் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

