காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவா் சோ்க்கை அக். 17 வரை நீட்டிப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) குறிப்பிட்ட தொழில் பிரிவுகளுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்குடியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நேரடி சோ்க்கை வருகிற 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் போன்ற இரண்டு ஆண்டு தொழில் பிரிவுகளும், கணினி இயக்குபவா் போன்ற ஓராண்டு தொழில் பிரிவுகளும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தொழில் 4.0 மைய தொழில் பிரிவுகளான அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் இரண்டு ஆண்டு தொழில் பிரிவுகளும், தொழில் துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் எண்ம (டிஜிட்டல்) உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா் ஓராண்டு தொழில் பிரிவுகளும் உள்ளன.

இதில் சேர மாணவா்கள் கட்டாயம் 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தொழில் பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையமான அமராவதிபுதூரில் உள்ள காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு மாணவா்கள் நேரில் வந்தும் சோ்க்கை மேற்கொள்ளலாம். அவ்வாறு சோ்க்கைக்கு வரும் போது, மாணவா்கள் தங்கள் நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.

இந்தத் தொழில் பயிற்சியின் போது அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளா்களுக்கும், அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ.1,750, இலவச பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து அட்டை

ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com