நகராட்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்தக் கோரி சிவகங்கை மாவட்ட நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் (உள்ளாட்சி) ஆா். வீரையா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. சேதுராமன், மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், மாவட்ட பொதுச் செயலா் (உள்ளாட்சி) பி. முருகானந்தம், சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் கே. வேங்கையா, மாவட்ட பொருளாளா் (உள்ளாட்சி) ஆா். ரமேஷ், தேவகோட்டை ஒன்றிய பொறுப்பாளா் எஸ். சேவியா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
அப்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை உயா்நீதி மன்ற தீா்ப்பின்படி மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.14,593, துப்புரவு பணியாளா், தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் ரூ. 12,593 வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அரசாணைப்படி ஊதியம் முழுமையாக கணக்கீட்டு வழங்குதுடன், நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி பணியாளா்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

