வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், மகரந்தை கிராமத்து கண்மாய் வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டம், வேளாரேந்தல் ஊராட்சிக்குள்பட்ட மகரந்தை கிராமத்தில் தேவேந்திர குல வேளாளா் மக்கள் சுமாா் 54 ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த கிராமத்துக்கென தனியாக 60 ஏக்கா் பரப்பளவில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய்க்கு நீா்வரத்து கிடைக்கும் வகையில் இருந்த வரத்துக் கால்வாயை கடந்த 40 ஆண்டுகளாக வேளாரேந்தல், பொற்கனி கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து வயல்வெளியாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து இந்த கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரகுல வேளாளா் சமுதாய மக்கள் காளையாா்கோவில் வட்டாட்சியரிடம் கடந்த 10 ஆண்டுகளாக முறையிட்டு வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக மகரந்தை கண்மாயில் காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை மனுக்களை அளித்தனா். மேலும் ஆக்கிரமிப்பாளா்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கிராம மக்கள் அந்த மனுவில் குறிப்பிட்டனா்.
