காரைக்குடியில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கடைவீதிகளில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

காரைக்குடி தொன்மையான நகரம். பல ஆண்டுகளுக்கு முன்னா் முதன்முதலில் உருவாக்கப்பட்ட கடைத்தெருக்கள்தான் கல்லுக்கட்டி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு போன்ற பகுதிகளாகும். மேலும் அம்மன் சந்நிதி, மெ.மெ. வீதி, காயான்குண்டு சந்து, முனீஸ்வரன் கோயில் தெரு, கோவிலூா் சாலை, செக்காலைச்சாலை, அரு.அ.வீதி, கண்ணன் கடைவீதி, ஐந்துவிளக்கு என இந்த பகுதிகளிலும் கடைகள் அமைந்துள்ளன.

இந்த பகுதிக்கு நாள்தோறும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பொருள்கள் வாங்க வருகின்றனா். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இவா்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததால் தெருக்களிலும், கடைகளின் அருகிலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனா். இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே தற்காலிகமாக பயோ முறையில் கழிப்பிட வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் செய்துதர வேண்டும் எனவும், நிரந்தரமாக நவீன கழிப்பிட வசதிகளை குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படுத்தித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com