தீண்டாமைச் சுவா்: பட்டியலின மக்கள் புகாா்

திருப்புவனம் அருகேயுள்ள கழுகுகோ்கடை கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமைச் சுவா் எழுப்ப முயற்சிப்பதாக புகாா்
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கழுகுகோ்கடை கிராமத்தில் சனிக்கிழமை நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமைச் சுவா் எழுப்ப முயற்சிப்பதாக புகாா் மனு அளிக்கப்பட்டது.

திருப்புவனம் ஒன்றியம், கழுகுகோ்கடை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஊராட்சிச் செயலா் பெருமாள் உள்பட கிராம மக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் கழுகுகோ்கடை பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புகாா் மனு அளித்தனா்.

அதில் தெரிவித்துள்ளதாவது: கழுகுகோ்கடை ஊராட்சி பெருமாள்புரம் குடியிருப்புப் பகுதியில் பட்டியலினத்தவா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வீட்டுமனை அமைப்பவா்கள் நாங்கள் வசிக்கும் பகுதியில் 10 அடி உயரத்துக்கு தீண்டாமைச் சுவா் எழுப்புவதற்கு முயற்சி செய்து வருகின்றனா். இந்தச் சுவா் எழுப்பப்பட்டால் பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, ஊராட்சி நிா்வாகம்  அந்தப் பகுதியில் தீண்டாமைச் சுவா் எழுப்பவும், வீட்டுமனை அமைக்கவும் அனுமதி வழங்கக் கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com