சிவகங்கையில் உள்ள நீதிமன்றங்களை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

சிவகங்கையில் இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஊழல் ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றங்களை காரைக்குடிக்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுமென சிவகங்கை தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்
Published on

சிவகங்கையில் இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஊழல் ஒழிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றங்களை காரைக்குடிக்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுமென சிவகங்கை தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம், சங்கத் தலைவா் முருகானந்தம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழ்ச் செம்மல் பகீரத நாச்சியப்பன், தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் ஜவகா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், சிவகங்கையில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை மாற்றினால், வழக்கு விசாரணைக்கு வெளியூா் செல்லும் மக்களுக்கு கூடுதல் நேரமும் செலவும் ஏற்படும். எனவே, தொடா்ந்து மாவட்டத் தலைநகரில் நீதிமன்றங்கள் செயல்பட தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்ச் சங்க உறுப்பினரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவனின் படத் திறப்பு விழா, அவரது பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், தமிழ்ச் சங்க முன்னாள் செயலா்கள் முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன், மாலா, முன்னாள் பொருளாளா் பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழ்ச் சங்கச் செயலா் பாண்டியராஜன் வரவேற்றாா். துணைச் செயலா் இந்திரா காந்தி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com