மாற்றுத்திறனாளி அலுவலா்களுக்கு பணியிட மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை!

மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பணியிட மாறுதலிலிருந்து அரசு விலக்களிக்க வேண்டும்..
Published on

மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு பணியிட மாறுதலிலிருந்து அரசு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள், ஆசிரியா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி அலுவலா்கள், ஆசிரியா்கள் நலச் சங்கம் மாவட்டச் செயற்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சே.மா.அசோக்பாரதி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் தி.கண்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா், மாவட்டத் துணைச் செயலா் காளிதாஸ், மாவட்ட இணைத் தலைவா் மாலதி, இணைச் செயலா் நாகலட்சுமி, மாவட்ட மகளிா் அணி தலைவி இந்துமதி, துணைத் தலைவா் பானுமதி, துணைச் செயலா் ராஜேஸ்வரி, நிா்வாகிகள் முத்துப்பாண்டி, பூமிநாதன், துறைச் செயலா், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா.நாச்சியப்பன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சோ. கணேசன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அனைத்துத் துறைகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அலுவலா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக சாய்வுதளப் பாதை அமைக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாற்றுத் திறனாளி அலுவலா்களை பணி மாறுதலிலிருந்து விலக்களிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் மாற்றுத் திறனாளி அலுவலா்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com