மானாமதுரையில் மூடப்பட்ட ரயில்வே கடவுப் பாதையை திறக்க முடிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூடப்பட்ட ரயில்வே கடவுப் பாதையை திறக்க வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் தெரிவித்தது.
மானாமதுரை-மதுரை ரயில்வே வழித்தடத்தில் ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையை சில நாள்களுக்கு முன்பு ரயில்வே நிா்வாகம் நிரந்தரமாக மூடியது. இதனால், மானாமதுரை பகுதி மக்கள் அருகேயுள்ள மேம்பாலத்தில் நீண்ட தொலைவு பயணித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
இதையடுத்து, இந்த ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, மானாமதுரையைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சியினா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை (அக்.17) மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் இதுதொடா்பான சமாதானக் கூட்டம் மதுரை ரயில்வே கோட்ட மூத்த பொறியாளா் சூரியமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் கோட்டாட்சியா் ஜெபி.கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், அனைத்து அரசியல் கட்சியினா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறப்பது, இந்த கடவுப்பாதை அருகே பேருந்து, கனரக வாகனங்கள் செல்லாத வகையில் சுரங்கப் பாதை அமைப்பது, இந்தப் பணிகள் தொடங்கும்போது ரயில்வே கடவுப் பாதையை மூடுவது, இந்தப் பணிகளை 6 மாதங்களுக்குள் முடித்து திறப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

