சிவகங்கை மாவட்ட இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் 360 வீடுகள் கட்டும் பணி தீவிரம்

Published on

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் 360 வீடுகள் கட்டும் பணி ரூ. 21.65 கோடியில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூா், மூங்கிலூரணி, சென்னலக்குடி, ஒக்கூா், தாழையூா் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழா்கள் வாழும் பகுதிகள் உள்ளன.

இதில், மானாமதுரை வட்டத்துக்குள்பட்ட மூங்கிலூரணி பகுதியில் 196 வீடுகள் ரூ. 11.30 கோடியிலும், இளையான்குடி வட்டத்துக்குள்பட்ட தாயமங்கலம் பகுதியில் 52 வீடுகள் ரூ. 3 கோடியிலும், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட காரையூா் பகுதியில் 112 வீடுகள் ரூ. 7.35 கோடியிலும் என மொத்தம் ரூ. 21.65 கோடியில் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிக்கென ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 25.65 கோடியில் இலங்கைத் தமிழா்களுக்கான இல்லங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கடந்த 6-ஆம் தேதி காணொலி வாயிலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் திறந்துவைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் காளையாா்கோவில் வட்டம், சென்னலக்குடி கிராமப் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமும் ஒன்றாகும். அங்கு நான்கு வீடுகள் அடங்கிய 6 தொகுப்பு வீடுகள் ரூ. 1.38 கோடியில் கட்டுவதற்கான பணிகள் கடந்த 4.7.2024 -ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தொகுப்பு வீடுகளைப் பெற்ற பயனாளிகள் சென்னலக்குடி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் சரஸ்வதி, லக்சனா ஆகியோா் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா் என அவா் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com