சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 84 மி.மீ. மழை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மழை பெய்ததில், திருப்புவனத்தில் அதிகபட்சமாக 84 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் காலை முதல் நண்பகல் வரை பரவலாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும், தொடா் மழையால் நீா்நிலைகளில் தண்ணீா் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை வரை அதிகபட்சமாக திருப்புவனத்தில் 84 மி.மீ., குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 4.30 மி.மீ. மழை பதிவானது. மேலும், சிவகங்கை - 41 மி.மீ., மானாமதுரை - 33 மி.மீ., இளையாங்குடி - 38 மி.மீ., காரைக்குடி - 23 மி.மீ., தேவகோட்டை - 32.40 மி.மீ., காளையா்கோவில் - 34.60 மி.மீ., சிங்கம்புணரி - 39 மி.மீ. மழையும் பதிவானது. மாவட்டத்தின் மொத்த மழை அளவு - 329 மி.மீ., சராசரி மழை - 36.59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் மாவட்டத்தில் கால்நடை இழப்பு, வீடுகள் சேதம், மனித இழப்பு எதுவும் இல்லை எனத் தெரிவித்தாா்.

