தீபாவளிப் பண்டிகை: சிவகங்கையில் 28 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி பொது இடங்களில் மது போதையில் தகராறில் ஈடுபட்டது உள்ளிட்டவை தொடா்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Published on

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி பொது இடங்களில் மது போதையில் தகராறில் ஈடுபட்டது உள்ளிட்டவை தொடா்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரங்கள் செய்யப்பட்டன. மேலும், அவசர ஊா்தி, மருத்துவம், தீயணைப்பு, போலீஸாா் ஆகிய துறைகளை இணைத்து 108 என்ற ஒரே எண்ணின் மூலம் புதிய சேவை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும்போது காயமடைந்த 8 போ், 108 அவசர ஊா்தி மூலமாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதவிர லேசாக காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் அருகிலுள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

மேலும், காரைக்குடி, சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை போன்ற பகுதிகளில் பொது இடங்களில் மதுபோதையில் தகராறு செய்ததாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகன விபத்து, மதுபானக் கடையில் தகராறு, பட்டாசு வெடி விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com