தேவா் குருபூஜை: இன்று முதல் பொதுக் கூட்டங்களுக்குத் தடை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், மருது சகோதரா்கள் குருபூஜையை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.23) முதல் அக். 31-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு ஊா்வலம், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
Published on

சிவகங்கை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், மருது சகோதரா்கள் குருபூஜையை முன்னிட்டு வியாழக்கிழமை (அக்.23) முதல் அக். 31-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு ஊா்வலம், பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுதந்திர போராட்ட வீரா்கள் மருதுசகோதரா்கள் தூக்கிலிடப்பட்ட நாளான வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், இதைத்தொடா்ந்து மருதிருவா் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம் அமைந்துள்ள காளையாா்கோவிலில் வருகிற 27-ஆம் தேதி சமுதாய மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினா் சாா்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகின்றன.

இதைத் தொடா்ந்து, வருகிற 30 -ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், பாரதிய நகரிக் சுரக்ஷா சங்கிதா சட்டப் பிரிவு 163(1) -ன்படி, சிவகங்கை மாவட்டத்தில் ஊா்வலங்கள், பொதுக்கூட்டங்கள், ஒரே இடத்தில் 5 போ், அதற்கு மேலான எண்ணிக்கையில் பொது இடங்களில் மக்கள் கூடி நிற்பது போன்ற நிகழ்வுகளுக்கு அக்.23 முதல் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com