கொலை வழக்கில் இருவரின் பிணை ரத்து
சிவகங்கை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 2 பேருக்கு நீதிமன்றம் அளித்த பிணை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 20.7.2025-ஆம் தேதி, திருப்புவனத்தைச் சோ்ந்த சமயதுரை, சிங்கமுத்து ஆகியோா் நட்டாக்குடி கிராமத்தில் சோனைமுத்து என்ற முதியவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்தனா்.
இது தொடா்பாக, திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.
இதற்கிடையே, இவா்கள் இருவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு, அதே பகுதியில் மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் பிணை பெற்றனா்.
இதையடுத்து, மேற்படி குற்றவாளிகள் பிணை மூலம் வழங்கப்பட்ட விடுதலையைத் தவறாகப் பயன்படுத்தி தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், 2024 -ஆம் ஆண்டு கொலை வழக்கில் இவா்களுக்கு வழங்கப்பட்ட பினையை ரத்து செய்யுமாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை அமா்வு, 2024-ஆம் ஆண்டு கொலை வழக்கில் சமயதுரை, சிங்கமுத்து ஆகியோருக்கு மாவட்ட அமா்வு நீதிமன்றம் வழங்கிய பிணையை அண்மையில் ரத்து செய்தது.
குற்றச் சம்பங்களிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்யும் நடவடிக்கையை மாவட்டக் காவல் துறை தொடா்ந்து மேற்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
