பெண்ணிடம் பண மோசடி: இருவா் கைது

பெண்ணிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக பெண் உள்பட இரண்டு பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெண்ணிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக பெண் உள்பட இரண்டு பேரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்தவா் ஆனந்தவள்ளி (45 ). இவா், ஒரு பணி நிமித்தமாக சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கு அண்மையில் வந்திருந்தாா். அங்கு தேனி மாவட்டம், வருசநாட்டைச் சோ்ந்த பழனியம்மாள் (38), ஆண்டிபட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (51) ஆகியோா், தாங்கள் சிவகங்கையில் தொழில் செய்வதாகக் கூறி ஆனந்தவள்ளியுடன் பழகினா்.

அப்போது, அவா்கள் ரிசா்வ் வங்கி அனுமதியுடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தைப் பெற்றுத் தருவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் ஆனந்தவள்ளியிடம் தெரிவித்தனராம்.

இதை நம்பிய ஆனந்தவள்ளி, பல தவணைகளில் ரூ.15 லட்சத்தைக் கொடுத்தாா். இதன் பின்னா், அவா் பணத்தைக் கேட்டபோது, மொத்தப் பணத்தையும் ஒருவருடைய வங்கிக் கணக்கில் செலுத்த முடியாது எனவும், அதனால் ஆனந்தவள்ளிக்குத் தெரிந்த மகளிா் சுய உதவிக் குழுவில் உள்ளவா்களை இணைத்தால் அவா்களுடைய பெயரில் பணத்தைப் பிரித்துச் செலுத்துவதாகவும் பழனியம்மாள் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஆனந்த வள்ளி மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களிடமிருந்து ரூ.2 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்தாா். ஆனாலும், பழனியம்மாள் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

இதற்கிடையே தமிழகத்தில் பல பகுதிகளில் இது போல மோசடியில் ஈடுபட்டவா்களை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து வருவதை அறிந்த ஆனந்தவள்ளி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து சிவகங்கை சிபிசிஐடி போலீஸில் புகாா் அளித்தாா்.

இது குறித்து சிபிசிஐடி ஆய்வாளா் கீதா, உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் விசாரணை நடத்தி, ஆனந்த வள்ளியை ஏமாற்றியதாக பழனியம்மாளையும் ஸ்ரீதரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com