சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநகராட்சி நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்குடி மாநகராட்சியில் 85 போ் நிரந்தரமாகவும், 152 போ் ஒப்பந்தத்திலும் என 152 தூய்மைப் பணியாளா்கள் பணியில் உள்ளனா். நகராட்சியாக இருந்த காரைக்குடி மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டதும் நிரந்தர பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்று ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கவேண்டும். தினமும் காலையில் தூய்மைப் பணியாளா்களுக்கு தரமான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். தூய்மைப் பணிக்கு நல்ல முறையில் இயங்கும் வாகனங்களை வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களை அடிக்கடி இடமாறுதல் செய்வதை நிறுத்த வேண்டும். இறந்த தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி- தேவகோட்டை சாலை அம்மன் சந்நிதி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து தூய்மைப் பணியாளா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்ததும் மாநகராட்சி ஆணையா் சங்கரன், காவல் துறை அதிகாரிகள் நேரில்சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்தது. இதுகுறித்த தகவல் தமிழக கனிம வளத்துறை அமைச்சா் டிகே. பிரபுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் கைப்பேசி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட நிா்வாகிகளிடம் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.










