தேனி மாவட்டத்தில் வணிகவரித் துறையின் மூலம், வணிகர்களுக்கு வழங்கப்படும் புதிய விற்பனை வரி எண் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், புதிய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்குபவர்கள் டின் எனப்படும் விற்பனை வரி எண், வணிகவரிக அலுவலகத்தில் பதிவு செய்து பெற வேண்டும். பதிவு எண் பெற்றவர்கள் மட்டுமே பொருள்களை கொள்முதல் செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.
இந்தப் பதிவு எண்ணை பெறுவதற்கு, வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர், அந்த நிறுவனத்தை வணிகவரித் துறையினர் பார்வையிட்டு, அதன்பிறகே எண் வழங்கப்படும். மேலும், வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்வதற்கு தனியாக எண் பெறவேண்டும். இதனை பெறுவதற்கும் தனியாக விண்ணப்பம் வழங்க வேண்டும்.
இந்த வெளிமாநில எண் பெறுவதற்கு, தற்போது சொத்து பத்திரம் வழங்கவேண்டும் என, பெரியகுளம் மற்றும் தேனி வணிகவரி அலுவலகங்களில் வற்புறுத்துகின்றனராம். மேலும், சொத்து இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனராம். இதனால், புதிதாக வெளிமாநில விற்பனை வரி எண் பெற்று தொழில் தொடங்க ஆர்வமுள்ள, ஆனால் வசதியற்ற இளைஞர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து, வணிகவரி அலுவலர்களை தொடர்பு கொண்டபோது: அவர்கள் தங்களுக்குத் தெரியாது என கூறிவிட்டனர்.
ஆனால், கட்டாயம் சொத்து இருந்தால் மட்டுமே வெளிமாநில விற்பனை வரி எண் வழங்கப்படும் என்றும், வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பொருள்களுக்கு வரிவிதிப்பு உண்டு என்றும், வரி கட்டவில்லை என்றால் அந்த சொத்துக்களை முடக்கம் செய்யமுடியும் என்பதால், சொத்துக்களை கட்டாயம் இணைக்கவேணடும் என்று, பெரியகுளம் வணிகவரி அலுவலர் தெரிவித்தார்.