போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளி தலைமை ஆசிரியர், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
போடி அருகே டி.சிந்தலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன். கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான இவர், சோலையூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு, மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார்.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த ஆசிரியர் பணியிட மாறுதலில், மலை சுழற்சி ஆசிரியர் பணி மாறுதல் மூலம், பெரியகுளம் அருகே அகமலை ஊரடி மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை என்றும், மேலும் வாகனத்தில் சென்று வருவதற்கான சாலை வசதியும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மலைக் கிராமங்களுக்கு பணி மாறுதல் செய்வதில், மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு உள்ள நிலையில், தனக்கு போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதால், பணிக்குச் சென்று வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது என ராயப்பன் தெரிவித்தார். இது குறித்து அவர், தேனி மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பா. கணேசனிடம் கேட்டபோது, 9.6.2014ஆம் தேதி தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆணையின்படியே பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி, கண் பார்வையற்றோர், புற்று நோயாளிகள், முதிர் கன்னிகள் மற்றும் எந்த வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மலைக் கிராமத்துக்கு மாறுதல் செய்யப்படுவதில் எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இது குறித்து இணை இயக்குநருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.