தேனி, செப். 23: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.3.52 லட்சம் வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 13 பேரின் குடும்பத்துக்கு இயற்கை மரண நிவாரணத் தொகை, சமூக நலத் துறை சார்பில் 37 ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
ராணுவப் பணியில் உயிரிழந்த உத்தமபாளையம் வட்டாரம், குச்சனூரைச் சேர்ந்த படைவீரர் முத்துச்சாமியின் குடும்பத்துக்கு ராணுவ நல நிதி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 36 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான அரசாணை ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சீ.சோமுபாண்டியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சாந்தி, அரசு சிறப்புத் திட்டங்கள் தனித் துணை ஆட்சியர் ஞானசேகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.