Enable Javscript for better performance
அழகிரி நீக்கத்தால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது: திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அழகிரி நீக்கத்தால் தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது: திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம்

    Published on : 27th March 2014 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டுள்ளதாலும், அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் எனக்கு எதிராகச் செயல்பட்டாலும், எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

      தேனியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

    தேனி மக்களவைத் தொகுதியின் சமூக, பொருளாதார நிலையையும், பொதுமக்களின் உணர்வுகள், கோரிக்கைகள், தேவைகளை அறிந்தவன் என்ற முறையில், என்னை ஆதரித்து வாக்களிக்க அனைத்து பிரிவைச் சேர்ந்த மக்களும் தயாராக உள்ளனர்.

      தேனி மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல்-லோயர்-கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்தவும், போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

      பொதுமக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, பாசனப் பரப்புகளில் முழுமையாக விவசாயம் நடைபெற ஆவண செய்வேன். நதி நீர் இணைப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவேன்.

       வைகை அணையை தூர்வாரி, முழு கொள்ளளவில் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுப்பேன். விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுக்கு ஏற்ப விற்பனை விலை கிடைக்கும் வகையில், குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்கவும், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுப்பேன்.   திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். கும்பக்கரை, சுருளி அருவி, சின்னச்சுருளி அருவி, மேகமலை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும், ஹைவேவிஸ் மலைச் சாலைக்கு மத்திய அரசிடம் நிதி பெற்றுத் தரவும், மலைக் கிராம இணைப்புத் சாலைகள் மற்றும் மாவட்ட இணைப்புச் சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

      அழகிரி தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதாலும், அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் எனக்கு எதிராகச் செயல்பட்டாலும் எவ்வித பாதிப்பும் இல்லை. அழகிரி எனக்கு எதிராக செயல்பட்டால், அது அவருக்கு எதிரான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

      கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை நான் சந்திக்கப் போவதில்லை. கட்சித் தலைவரின் ஆதரவு எனக்கு முழுமையாக இருக்கும்போது, எந்த சக்தியாலும் எனக்கு எள்முனை அளவுக்குக் கூட பாதிப்பு இல்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai