Enable Javscript for better performance
கம்பம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழைத் தோட்டம் நாசம்- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் அருகே காட்டு யானைகள் புகுந்து வாழைத் தோட்டம் நாசம்

    By கம்பம்  |   Published on : 02nd April 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பம் அருகே லோயர்-கேம்ப் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாழைகளை சேதப்படுத்தியுள்ளன.

    தேனி மாவட்டம், கூடலூர் 21 ஆவது வார்டு லோயர்-கேம்ப் மலை அடிவாரப் பகுதியையொட்டிய ஏகலூத்து, கழுதைமேடுபுலம், பெருமாள்கோவில் மலை, கல்லுடைச்சான் பாறை, பழியன்குடி மற்றும் சுருளியாறு மின்நிலைய சாலைப் பகுதிகளில் ஏராளமான மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன.

    மலை அடிவாரம் என்பதால், வனவிலங்குகள் அடிக்கடி இந்த விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன. விவசாயிகள் தீப்பந்தம் மற்றும் தகரத்தை தட்டி ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டி வருகின்றனர். மேலும், மலை அடிவாரப் பகுதியையொட்டிய சில இடங்களில் அகழி மற்றும் மின்வேலிகளும் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ளன.

    சுருளியாறு மின்நிலைய சாலை நாயக்கர்தொழு பகுதியில், சின்னமனூரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் 20 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்த நிலத்துக்குள் கம்பி வேலியை தகர்த்து செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைக்கூட்டம், நூற்றுக்கணக்கான வாழை மரங்களை நாசம் செய்துவிட்டுச் சென்றுவிட்டன.

    புதன்கிழமை காலை தோட்டத்துக்கு வந்த பத்மநாபன், யானைகளால் வாழைமரங்கள் சேதமடைந்திருப்பது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கூடலூர் ரேஞ்சர் கில்பர்ட் தலைமையில் சென்ற வனத் துறையினர், விளைநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட்டு, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனராம்.

    இது குறித்து, இப்பகுதி விவசாயிகள் கூறியது:

    விளைநிலத்தைச் சுற்றிலும் அகழி மற்றும் மின்வேலி அமைக்கும் பணியை வனத்துறையினர் முழுமையாக முடிக்காததால், வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கிறது.

    கடந்த ஆண்டில் மட்டும் 3 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதனால், கூலி வேலைக்கு கூட ஆள்கள் வர அஞ்சுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க முன்வரவேண்டும் என்கின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai