Enable Javscript for better performance
அம்பரப்பர் மலைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    அம்பரப்பர் மலைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்

    By போடி,  |   Published on : 05th April 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் அம்பரப்பர் கோயிலில் 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள் சனிக்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் மத்திய அரசு ரூ.1,560 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. இந்த அம்பரப்பர் மலையடிவாரத்தில் பொட்டிப்புரம், சின்ன பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், திம்மிநாயக்கன்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் வழிபடும் அம்பரப்பர் கோயில் உள்ளது.

    இந்த கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை, மாசி, பங்குனி ஆகிய 3 மாதங்களில், ஏதாவது ஒரு மாதத்தில் 5 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அப்போது அம்பரப்பர் மலைப்பகுதியில் உள்ள தீபஸ்தம்பத்திற்கும் தீபமேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. இதனை வரவேற்று இப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை (மார்ச் 28) இந்த கோயிலில் வழிபாடு நடத்த சென்றனர். பின்னர், மலைப்பகுதியில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபமேற்ற சென்றபோது காவல்துறையினர் அனுமதி மறுக்கவே கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனையடுத்து சனிக்கிழமை (ஏப்.4) பொங்கல் வைக்க காவல்துறையினர் அனுமதியளித்தனர். அதன் பேரில் 5 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்பரப்பர் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சியான தேவராட்டம் நடைபெற்றது. பின்னர், தீபஸ்தம்பத்தில் பட்டுத் துணி அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளைக் கொடி காட்டியபின் பொங்கல் வழங்கி வழிபாட்டினை முடித்தனர். நிகழ்ச்சியில் மதிமுக, விவிமு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai