சுடச்சுட

    

    கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை: 5 பேர் கைது

    By கம்பம்,  |   Published on : 05th April 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்டார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இதில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தில் சாமாண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியைக் காண, அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன்(30), தனது நண்பர்கள் நாராயணத்தேவன்பட்டி மாரியப்பன்(21), மதுரை திருப்புவனத்தைச் சேர்ந்த செல்வம்(21) ஆகியோருடன் சென்றுள்ளார்.

    கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, ஈஸ்வரன் தரப்பினருக்கும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த சிலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதை அப்பகுதியில் உள்ளவர்கள் விலக்கி விட்டுள்ளனர். மோதலில், ஈஸ்வரனின் நண்பர் மாரியப்பனின் செல்லிடப்பேசி மாயமாகியுள்ளது.

    இதையடுத்து மாரியப்பன் தனது எண்ணுக்கு அழைத்தபோது, கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர்கள், செல்லிடப்பேசி தங்களிடம் இருப்பதாகவும், வாய்க்கால் அருகே வந்து வாங்கி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈஸ்வரன், மாரியப்பன், செல்வம் ஆகிய 3 பேரும் அங்கு சென்று செல்லிடப்பேசியை கேட்டபோது, கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், மாரியப்பன், செல்வம், ஈஸ்வரன் ஆகிய மூவரையும் வெட்டினர். இதில், ஈஸ்வரன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்தபோது, மாரியப்பனும், செல்வமும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக இரண்டு பேரையும், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாரியப்பன் உயிரிழந்தது தெரியவந்தது. செல்வம் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதற்கிடையில், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாரியப்பனின் உறவினர்கள், சனிக்கிழமை காலை கம்பம் அரசு மருத்துவமனை, போக்குவரத்து சிக்னல் ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. மறியலால் கம்பம்-குமுளி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில்,சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஈஸ்வரன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்(21), ஈஸ்வரன் மகன் விஜயன்(19), முருகன் மகன் சூர்யபிரகாஷ்(21), கலையரசன் மகன் விஜித்(18), ஈஸ்வரன் மகன் சரவணக்குமார்(20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், தப்பிச்சென்ற மூக்கன் மகன் குமார், ஈஸ்வரன் மகன் சிவனேசன் ஆகியோரையும் தேடிவருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai