Enable Javscript for better performance
கொடைக்கானல் மலைச் சாலையில்  60 அடி பள்ளத்தில் வேன் உருண்டதில் 23 பேர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் மலைச் சாலையில்  60 அடி பள்ளத்தில் வேன் உருண்டதில் 23 பேர் படுகாயம்

    By பழனி  |   Published on : 09th April 2015 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வேன், புதன்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் 23 பேர் படுகாயமடைந்தனர்.

       கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பொன்னேரி தாலுகா, வெள்ளையங்கோடு பகுதியைச் சேர்ந்த 9 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் என மொத்தம் 22 பேர், கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக புதன்கிழமை மாலை கிளம்பியுள்ளனர்.

      இந்த வேனை, அதே பகுதியைச் சேர்ந்த ஜாபீர் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.  புதன்கிழமை இரவு, பழனி வழியாக கொடைக்கானல் மலைச் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, கோம்பைக்காடு நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து உருண்டது.

      இந்த விபத்தில், தெமீஷா (16), ஈஷா (1), தவித்ரா (11), ஜெப்ரா (12), முஜிப் (10) மற்றும் வேன் ஓட்டுநர் உள்பட வேனில் பயணித்த 23 பேரும் பலத்த காயமடைந்தனர்.

      இந்த விபத்தை, அவ்வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பார்த்து, உடனடியாக கொடைக்கானல் மற்றும் பழனி காவல்துறைக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், மீட்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.  பின்னர், மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு, அவ்வழியே வந்த வாகனங்கள் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      இவர்களில், பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் ஜாபீர் (27), சுபைனா (38), ஷமீரா (35), ஜெமீலா (35) உள்ளிட்ட 5 பேர், கோவை மற்றும் மதுரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  

    பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, பழனி கோட்டாட்சியர் கீதா, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் மற்றும் பழனி தொகுதி எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் பெரியசாமி ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai