சுடச்சுட

  

  இரு மடங்கு கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசு மானியம் வழங்குமா?

  By தேனி  |   Published on : 10th April 2015 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தியுள்ளதால், அதிருப்தியில் உள்ள பொதுமக்கள், குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

     மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வாரியம் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலும், தனி திட்டத்திலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தனித் திட்டத்தின் கீழ், குடிநீரை பம்பிங் செய்து விநியோகம் செய்வதற்கு மின் வாரியத்துக்கும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீருக்கு 1,000 லிட்டருக்கு ரூ.4.50 வீதம் குடிநீர் வாரியத்துக்கும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கட்டணம் செலுத்த வேண்டும். குடிநீர் திட்டங்களுக்கு மின்வாரியம் சார்பில் கட்டண சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

    கூட்டுக் குடிநீர் திட்டங்கள் குடிநீர் வாரியம் சார்பிலும், தனி குடிநீர் திட்டங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் பராமரிக்கப்படுகின்றன. குடிநீர் வாரியம் சார்பில், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 270 கிராமங்கள், 12 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், ஊராட்சிகள் சார்பில் செலுத்த வேண்டிய கட்டணத்தை, ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதியில் இருந்து அரசு பிடித்தம் செய்து குடிநீர் வாரியத்துக்கு வழங்குகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் குடிநீர் வாரியத்துக்கு நேரடியாக கட்டணம் செலுத்துகிறது.

    உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், குடிநீர் வாரியத்துக்கு தற்போது வரை மொத்தம் ரூ.3 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம், குடிநீர் மற்றும் மின் வாரியங்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கு பற்றாக்குறையாக உள்ள நிலையில், பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.

    இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் மின் வாரியங்களுக்கான கட்டண பாக்கிகளை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் குடிநீர் கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.100 வரை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, சில இடங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டணத்தை ஒரே கட்டத்தில் இரு மடங்காக உயர்த்தியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி. வெங்கடேசன் கூறுகையில், குடிநீர் விநியோகத்தை அரசு அத்தியாவசிய சேவையாக ஏற்று, குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு மானியம் வழங்கி, பொதுமக்கள் மீதான கட்டணச் சுமையை தவிர்க்க வேண்டும். குடிநீர் மற்றும் மின் வாரியங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை ரத்து செய்யவேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai