ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் போராட்டம்
By போடி | Published on : 17th April 2015 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போடி அருகே ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், வியாழக்கிழமை போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 15 ஊராட்சிகளில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சிலமலை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, கடந்த 2014 டிசம்பர் மாதம் வரையிலான ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, ஊராட்சி ஒன்றியத்தில் முறையாக பதிலளிக்காத அலுவலரைக் கண்டித்தும், ஊதிய நிலுவைத் தொகை உடனே வழங்க வலியுறுத்தியும், புதிய வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தியும், நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் திடீரென போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பாண்டியன், தங்கபாண்டியன், தாலுகா குழு உறுப்பினர் ரெகுபதி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.