சுடச்சுட

    

    உலக மயமாக்கலின் எதிரொலியே நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்

    By தேனி,  |   Published on : 20th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகமயமாக்கலின் எதிரொலியாகவே தமிழகத்தில் அணு உலை, மீத்தேன் வாயு, நியூட்ரினோ ஆய்வு ஆகிய மனித குல அழிவுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

    தேனியில் தமிழர் உரிமை மீட்புக் குழு சார்பில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தர தடை கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர் உரிமை மீட்புக் குழு தலைவர் ந.இளங்குமரன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் ரா.தமிழ்வாணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டத் தலைவர் டி.ராமசாமி, பொட்டிப்புரம் வீரத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசியக் கட்சித் தலைவர் மொ.ஐயப்பன் வரவேற்றார். கா.அய்யநாதன் துவக்கி வைத்தார்.

    உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பழ.நெடுமாறன் பேசியது: நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தினால் பேரழிவு ஏற்படக் கூடும் என்ற பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது.

    அரசு சாராத விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்துறை அறிஞர்கள் மூலம் இத்திட்டத்தின் நோக்கம் ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

    மத்திய அரசின் உலக மயமாக்கல் கொள்கையின் எதிரொலியாகவே, ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்த திட்டங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படாத அணு உலைத் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம், நியூட்ரினோ திட்டம் ஆகியவை தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    மனித குலத்துக்கு பேரழிவு ஏற்படுத்தும் இத் திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai