சுடச்சுட

    

    வைகை ஆற்றின் வளத்தை பாதுகாக்க மேகமலையில் புலிகள் சரணலாயம் அமைக்க வேண்டும் என்று வனம் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் 660 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மேகமலை வனப் பகுதி தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், 220 சதுர கி.மீ. வன உயிரின சரணலாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 180 சதுர கி.மீ. ஆக்கிரமிப்பிலும், 260 சதுர கி.மீ. ஒதுக்கு காடுகளாகவும் உள்ளன.

    மேகமலையில், வெள்ளிமலை வனப் பகுதியில் வைகை நதி உற்பத்தியாகும் இடத்தில் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. மேலும் இந்தப் பகுதி ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் அரணாக உள்ளது. எனவே தேக்கடி பெரியாறு புலிகள் சரணலாயத்தை அடுத்துள்ள, மேகமலை வனப் பகுதியையும் புலிகள் சரணாலமாக அறிவிக்க வேண்டும் என்று வனம் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒருங்கிணைந்த பாதுகாப்புக்கு உதவும்:

    தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலய துணை இயக்குநர் சஞ்ஜீவன் குமார் கூறியதாவது: இந்த புலிகள் சரணலாயம் அமைக்கப்பட்டால், இதன் மூலம் கிடைக்கும் நிதியை அப்பகுதி மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்தலாம். வனப் பகுதியில் பழங்குடியினர் விளைவிக்கும் விளை பொருள்கள் வனத் துறை உதவியுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு மூலம் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு தேக்கடி மன்னான்குடி பகுதியில் 700 டன் வரை மிளகு உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கூடலூரைச் சேர்ந்த மனம் திருந்திய முன்னாள் வனக் குற்றவாளிகள் 23 பேர் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வனப் பாதுகாப்பு பணியிலும் மற்றும் சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளனர். மேகமலையை, புலிகள் சரணலயமாக அறிவித்தால் பெரியாறு, வைகை நீராதாரங்கள் மற்றும் அரிய உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

    மாசுபடும் வைகை:

    தேனி வனம் டிரஸ்ட் அமைப்பாளர் சி.பி.ராஜ்குமார் கூறியதாவது: மேகமலை வனப் பகுதி மாசுபட்டு வருவதால், வைகை நதி பாதிக்கப்படுகிறது. காடுகள் அழிந்து வருவதால் நீரோடைகள் மற்றும் வன விலங்குகள் தடம் மாறிச் செல்கின்றன. மண் அரிப்பால் ஆற்றில் மணல் செறிவின்றி வைகை அணையில், 14 அடி உயரம் வரை மண் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ளன. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனப் பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவித்தால், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க முடியும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai