சுடச்சுட

    

    மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

    By கம்பம்  |   Published on : 29th April 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா தொடர்பாக, தமிழக-கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பீர்மேடு பெண் எம்.எல்.ஏ. பிஜூமோள் கலந்துகொள்ளவில்லை.

      மங்கலதேவி கண்ணகி கோயில், தமிழக-கேரள எல்லையில் கூடலூர் வனச்சரகத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு நாளில் மட்டுமே இக்கோயிலுக்கு பக்தர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவர். இந்தாண்டுத் திருவிழா மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

    விழாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை, கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.  அதன்படி, தமிழக-கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை தேக்கடியிலுள்ள ராஜீவ்காந்தி அரங்கத்தில், தமிழக-கேரள அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜே. மகேஷ், மேகமலை வனச் சரணாலயக் காப்பாளர் சொர்ணப்பன் உள்ளிட்ட பலரும், கேரளத்தின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. ரதீசன், அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.வி. ஜோசப், பெரியாறு புலிகள் சரணாலயத்தின் துணை இயக்குநர் சஞ்ஜீவன்குமார் உள்ளிட்ட பலரும் மற்றும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும், கேரள இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்த பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜூமோள், கடைசி வரை வரவில்லை. எனவே, கூட்டம் பிற்பகல் 12.15 மணியளவில் தொடங்கியது.

    அதில், வழக்கம்போல் தமிழகம் சார்பிலும், கேரளம் சார்பிலும் தலா ஒரு பூஜாரி நியமித்துக் கொள்வது. பக்தர்கள் காலையில் 6 மணியிலிருந்து அனுமதிக்கப்படுவர். தமிழக-கேரள பத்திரிகையாளர்களுக்கு தனிஅடையாள அட்டை வழங்கப்படும். வனப் பகுதியிலும், கோயில் வளாகத்திலும் பத்திரிகையாளர்கள் தவிர மற்றவர்கள் படம், விடியோ எடுக்க அனுமதி கிடையாது. 3 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, தமிழக-கேரள போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இருதய சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழு அமைப்பது உள்ளிட்ட பக்தர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தாண்டு சிறப்பாக விழா கொண்டாடவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai