சுடச்சுட

  

  போடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 58 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.       

   போடி கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சந்திரசேகரன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனின் உறவினர். இவர் கடந்த ஜனவரி மாதம் வெளியூர் சென்றிருந்தபோது ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 12 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.ஆயிரம் திருடிச் சென்றனர்.

   இந்நிலையில் போடி திருமலாபுரத்தைச் சேர்ந்த கால்நடை உதவி இயக்குநர் முருகேசன் என்பவரது வீட்டின் ஜன்னலை உடைத்து 19 பவுன் நகை திருடப்பட்டது.  இதேபோல் போடி குலாளர்பாளையத்தில் செல்லத்துரை என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை திருடப்பட்டது.

  இதனையடுத்து போடி அமராவதி நகரில் ஏலக்காய் வியாபாரி ராமகிருஷ்ணன் வீட்டில்  பட்டப் பகலில் 30 பவுன் நகை திருடப்பட்டது. இதேபோல் 8.9.2015 ஆம் தேதி ராஜராஜேஸ்வரி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி, குண்டு உள்ளிட்ட 2 பவுன் நகையும், 750 கிராம் வெள்ளி பொருட்களும், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அதன் உதிரி பாகங்களும் திருடப்பட்டன.

   இந்த தொடர் திருட்டு குறித்து போடி டி.எஸ்.பி. ஸ்ரீநிவாசப் பெருமாள் உத்திரவின் பேரில் போடி துணைக் கோட்ட குற்றப்பிரிவு போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த வாரம் சந்தேகத்தின் பேரில் தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த பாண்டியன் மகன்  ராஜா (35) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

   அவர் அளித்த தகவலின் பேரில் இந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த அய்யாத்துரை மகன் வணங்காமுடி (27), திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் வணங்காமுடி, ராஜா ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், ராஜாவின் சகோதரி தனலட்சுமி மூலம் நகைகளை அடகு வைத்ததும் தெரியவந்தது.

   ராஜா ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வணங்காமுடி, தனலட்சுமி ஆகியோரை வியாழக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் மொத்தம் திருடுபோன 91 பவுன் நகைகளில் 58 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். மற்ற நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai