சுடச்சுட

  

  தேனி அல்லிநகரம் நகராட்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் வேளாண் விளைபொருள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை நகராட்சி சந்தை வளாகம் முன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

   தேனியில் நேருசிலை போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள இடத்தில் நகராட்சி வாரச் சந்தை மற்றும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தைக்கு, வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வரும் பொருள்களுக்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் குத்தகை ஏலம் விடப்பட்டுள்ளது.

   வாரச் சந்தை வளாகத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தை கமிஷன் கடைகளுக்கு வேளாண்மை விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடமும் வெள்ளிக்கிழமை, வாரச்சந்தை குத்தகைதாரர் மூடை ஒன்றுக்கு ரூ.10 கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கண்ணன் தலைமையில் விவசாயிகள், வாரச் சந்தை வளாகம் முன் முற்றுகையிட்டனர்.

   சனிக்கிழமை கூடும் வாரச் சந்தையில் விற்பனை செய்வதற்காக, வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சந்தைக்கு பொருள்கள் கொண்டு வரப்படுவதால் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

   தேனி-பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் தேனி காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தார்.

   இப்பிரச்னை குறித்து விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பினருடன் நகராட்சி ஆணையர் ராஜாராம் செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  டிச.28-ஆம் தேதி விவசாயிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்ததாக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் டி.கண்ணன் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai