சுடச்சுட

  

  ஒட்டன்சத்திரத்தில் இணைய ஏல மையம் அமைக்கப்படும்: திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் தகவல்

  By திண்டுக்கல்  |   Published on : 31st December 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகளின் வசதிக்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் இணைய ஏல மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் எம்.பி. மு.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் ரபி முன் பருவக்கால விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

  இந்த கண்காட்சியை தொடங்கிவைத்து திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் மு.உதயகுமார் பேசியதாவது:

  காய்கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் இணைய ஏல மையம் (இ-மண்டி), குளிர்பதனக் கிடங்கு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தின் நீராதாரங்களை பெருக்கி, மூலிகைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்றார்.

  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் பேசியதாவது: தமிழகத்தில் ஆடி, புரட்டாசி, தை என 3 பயிர் பட்டங்கள் உள்ளன. பருவகாலம், தட்பவெப்பம், நீர்வசதி ஆகியவற்றின் அடிப்படையில் நம் முன்னோர்கள் பயிருக்கான பட்டங்களைத் தேர்வு செய்துள்ளனர். பயறு வகைகள், எண்ணைய் வித்துக்கள் சாகுபடி செய்வதற்கு ரபி பருவம் சிறந்தது. பருவக் காலத்திற்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்வதன் மூலமே, விவசாயிகள் லாபம் பெற முடியும். புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை காந்தி கிராம வேளாண் அறிவியல் மையத்தின் உதவியோடு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  இதில், வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முதல்வர் எஸ். கணேஷ், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தவமணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் என்.ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  புதிய விடுதி திறப்பு:முன்னதாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவிகள் 100 பேர் தங்கும் வகையில் ரூ.2.64 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 24 அறைகள் கொண்ட விடுதி திறப்பு விழா நடைபெற்றது. புதிய விடுதியை எம்.பி. உதயகுமார், பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai