Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக கட்சிகள் நேரடி பலப் பரீட்சையில் இறங்கியுள்ளன.

      மாவட்டத்தில், காங்கிரஸ், சுதந்திரா, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், கடந்த 1967 முதல் திமுக, அதிமுக கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

       மாவட்டத்துக்கு உள்பட்ட தொகுதிகளில் திமுக சார்பில் திரைப்பட நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், அதிமுக சார்பில் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

      கடந்த 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகவும், கம்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

    கூட்டணியில் கைமாறிய தொகுதி

      கடந்த 1996 இல் திமுக கூட்டணியில் கம்பம் மற்றும் தேனி தொகுதியும், 2001 இல் அதிமுக கூட்டணியில் கம்பம் தொகுதியும் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டது. 2006 இல் அதிமுக கூட்டணியில் கம்பம் தொகுதியில் மதிமுக போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகளிடையே நேரடி மோதல் இருந்தது.

      கடந்த 2011 இல் மறுசீரமைக்கப்பட்ட ஆண்டிபட்டி, போடி ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாகவும், அதிமுக கூட்டணியில் பெரியகுளம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கம்பம் தொகுதியில் தேமுதிகவும் போட்டியிட்டன.

    நேரடி மோதல்

      2016 சட்டப்பேரவைத் தேர்தலில், மாவட்டத்துக்கு உள்பட்ட 4 தொகுதிகளிலும் திமுக-அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கின்றனர்.

       ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலரும், கடந்த 2011 இல் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான எல். மூக்கையாவும், அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தங்க. தமிழ்ச்செல்வனும் மோதுகின்றனர்.

       பெரியகுளம் (தனி) தொகுதியில், கடந்த 2011 இல் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற வீ. அன்பழகனும், அதிமுக சார்பில் அறிமுக வேட்பாளர் கா. கதிர்காமும் களம் காண்கின்றனர்.

       போடி தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். லட்சுமணன், அதிமுக சார்பில் தற்போதைய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடி போட்டியில் உள்ளனர்.

      கம்பம் தொகுதியில், திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. நா. ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் தமிழக தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் மோதுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai