பழங்குடியினர் மீதான வன்கொடுமை வழக்கை திசை திருப்ப முயற்சி: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

கம்பம் அருகே பழங்குடியினர் சமுதாய மக்கள் மீதான வன்கொடுமை வழக்கை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கம்பம் அருகே பழங்குடியினர் சமுதாய மக்கள் மீதான வன்கொடுமை வழக்கை திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கம்பம் அருகே வனத் துறையினரால் பழங்குடியினர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனி பங்களாமேடு திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்து திருமாவளவன் பேசியதாவது:

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, சுருளிமலைப் பகுதியில் தேன், நன்னாரி வேர், கிழங்கு போன்ற மலைப் பொருள்களை சேகரிக்க கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டியைச் சேர்ந்த 5 பளியர் சமுதாய பழங்குடியின குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, இவர்களில் 13 வயது சிறுமி உள்பட 5 பெண்கள், 5 ஆண்கள் கம்பம் அருகே வனத் துறையினரால் வழிமறிக்கப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, வனத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடந்த ஜூலை 28 ஆம் தேதி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கு கடமலைக்குண்டு வனச்சரக அலுவலகத்துக்குச் சென்ற பழங்குடியினர் மீது, வனத் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கம்பம் அருகே சுருளி அருவிச் சாலையில் சிலர் வனப் பகுதியில் இருந்து எறும்பு தின்னியை கடத்திச் செல்வதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், வனத் துறையினர் சோதனை நடத்தியதாக மட்டும் சட்டப்பேரவையில் வனத் துறை அமைச்சர் அறிக்கை அளித்துள்ளார். முறையான விசாரணையின்றி, அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அமைச்சர் அளித்துள்ள அறிக்கை, பழங்குடியினர் மீதான வன்கொடுமை வழக்கு விசாரணையை திசை திரும்பும் செயலாகும்.

பழங்குடியினரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய வனத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். கடமலைக்குண்டில் கைது செய்யப்பட்டுள்ள பழங்குடியினரை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்துக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இங்கு பழங்குடியினருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com