தமிழக-கேரள எல்லையான கம்பம் மெட்டு பகுதியில் இரு மாநில அதிகாரிகள் இணைந்து புதன்கிழமை நடத்திய நில அளவீட்டின்போது (சர்வே) தமிழக வனப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கேரளா ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம்-கம்பம் மெட்டு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த பிப்ரவரியில் திடீரென கேரள சுங்கத் துறையினர் சோதனைச் சாவடி அமைக்க தாற்காலிக கண்டெய்னரை நிறுத்தினர். அதை தடுத்த தமிழக வனத்துறையினர் தாக்கப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், முறையான ஆவணங்களுடன் தமிழக-கேரள எல்லைப் பகுதியை இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக நில அளவீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை தமிழக-கேரள அதிகாரிகள் கூட்டாக நில அளவைப் பணியை தொடங்கினர்.
தமிழகத்தின் சார்பில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், கேரளத்தின் சார்பில், தேவிகுளம் துணை ஆட்சியர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் இப்பணியில் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக கம்பம் மெட்டு அருகே உள்ள மந்திப்பாறை நாவல் பள்ளம் என்ற இடத்திலிருந்து பணி தொடங்கப்பட்டது. அப்போது, தமிழக வனத்துறையின் பல நூறு ஏக்கர் நிலங்களை கேரளாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அரசு ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியும், ஏலக்காய், மிளகு விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் கேரள காவல்துறையும், வனத்துறையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் 6 இடங்களில் நில அளவை கல்லை கேரளா ஆக்கிரமித்திருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து ராமக்கல் மெட்டு பகுதி வரை இரு மாநில எல்லை குறித்த நில அளவீடு நடத்தப்படும் என்று இரு தரப்பு அதிகாரிகளும் கூட்டாக தெரிவித்தனர். இந்தப் பணியில் ஜி.பி.எஸ். போன்ற நவீன தொழில்நுட்பமும், பழமையான பட்டையம் மற்றும் வரைபடங்களும் பயன்படுத்தப்பட்டன.
இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறியதாவது: கம்பம் மெட்டு பகுதியில் நில அளவீடு பணியின்போது அடையாளம் தெரிவதற்காக அளவீடு கல் நட நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதற்கு கேரள அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி மறுத்துவிட்டனர்.
மேலும், இரு மாநில வரை படங்களில் அசல் நில அளவீடு கல் புள்ளியை குறித்து வைத்து கொள்வது என்றும், பின்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து அதன்பின் கல் நடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.