பெரியகுளம் பகுதியில் கலப்பின எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரிப்பால் மலை எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே அகமலை, கண்ணக்கரை, அலங்காரம் , மருதையனூர், ஊரடி, ஊத்துக்காடு, சின்னூர் என 20-க்கு மேற்பட்ட மலை கிராமங்களில் காபி, மலை வாழை, எலுமிச்சை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் இங்கு விளையும் பொருள்கள் குதிரை மூலம் சோத்துப்பாறை அணைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து வாகனம் மூலம் பெரியகுளம் பகுதியில் உள்ள கமிஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள காடுகளில் தற்போது கலப்பின(ஹைபிரைட்) எலுமிச்சை பயிரிடப்படுகிறது. இவ்வாறு பயிரிடப்படும் எலுமிச்சை குறைந்த நாளில் நல்ல பருமனுடன் கிடைக்கிறது. இந்த எலுமிச்சையின் சாறு புளிப்புத்தன்மை குறைவு. ஆனால் நல்ல நிறத்துடன் இருப்பதால் பெரும்பாலான பொதுமக்கள் இதனை வாங்கி செல்கின்றனர். கலப்பின எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்து இருப்பதால் தற்போது, எலுமிச்சை பழம் மூட்டை ரூ. 800 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் மூட்டை ஒன்று ரூ. 2000 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது கலப்பின பழங்களின் வரத்து காரணமாக, மலை பழங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் விலை குறைவாக உள்ளதாக மலை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணக்கரை விவசாயி மணி தெரிவித்தது: மலைப்பகுதியில் விளையும் எலுமிச்சை பழம் சிறிய அளவில் இருக்கும். இந்த பழங்களில் புளிப்புத்தன்மை அதிகம் உண்டு. பழங்களை பறிப்பதற்கு ஒரு நபருக்கு கூலி மட்டும் ரூ. 400 வழங்கப்படுகிறது. தோட்டங்களில் இருந்து சாலைக்கு எடுத்து வர ஒரு மூட்டைக்கு ரூ. 100 செலவழிக்கப்படுகிறது. மேலும் பழங்கள் ஏலம் விடுவதற்கு மூட்டைக்கு ரூ. 50 வழங்கப்படுகிறது. இது போக விவசாயிகளுக்கு கிடைப்பது மூட்டைக்கு ரூ. 250 மட்டுமே. இதில் எங்களுக்கு போதிய லாபம் இல்லாததால் பெரும்பாலான தோட்டங்களில் காய்களை பறிக்காமல் விட்டு விட்டோம் என்றார்.