Enable Javscript for better performance
நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.மணி- Dinamani

சுடச்சுட

    

    நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.மணி

    By DIN  |   Published on : 24th March 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணைகளின் பாதுகாப்பு கருதி தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
    தேனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    60 ஆயிரம் சதுர கி.மீ.பரப்பளவுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் தொடங்குகின்றனர். இதனால் என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை ஆராயாமல், மத்திய அரசின் நிர்பந்தத்திற்காக நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.
    பெரியாறு அணை மற்றும் இடுக்கி அணைகளின் பாதுகாப்பு கருதி தேனி மாவட்டத்தில், தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
    கூட்டுறவு சங்கத் தேர்தலில்போட்டி: இதைத்தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஜி.கே. மணி கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், மத்திய அரசின் திட்டமிட்ட துரோகத்தால், தமிழகத்துக்கான நதிநீர் உரிமை பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு வருகிறது.
    கேரள அரசு சார்பில், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பவானி ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 3-ஆவது அணைக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சி ஏற்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் உருவாகும்.
    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், 30-ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு பாமக துணை நிற்கும். கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தனித் தேர்தல் ஆணையம் அமைத்தும் கூட, வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை. விரைவில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்றார்.
    இக்கூட்டத்தில், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் இரா.பரசுராமன், அமைப்புச் செயலர் மீ.கா.செல்வக்குமார், சுப்பிரமணி, திருப்பதி, கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai