Enable Javscript for better performance
சொத்து வரி உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு: தேனி மாவட்டத்தில் வரிவசூல் இலக்கை எட்டுவதில் சிக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சொத்து வரி உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு: தேனி மாவட்டத்தில் வரிவசூல் இலக்கை எட்டுவதில் சிக்கல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சிகளில் வரி மறு சீராய்வின் அடிப்படையில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், வரி வசூலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
     தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகளில் 2008-ம் ஆண்டு முதல் சொத்து வரியினங்கள் மறு சீராய்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளி, திருமண மண்டபம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளவீடு செய்யப்பட்டு,  கட்டடத்தின் தன்மை மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. 
    வீட்டு வரியும் உயர்வு:
    மறு சீராய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியை ஆறரை ஆண்டுக்குரிய  நிலுவைத் தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகங்கள் அறிவித்திருந்தன. மேலும் போடி, சின்னமனூர் ஆகிய நகராட்சிகளில் சொத்து வரி மறு சீராய்வுடன், வீட்டு வரி விதியும் உயர்த்தப்பட்டுள்ளன. 
    பொதுமக்கள் எதிர்ப்பு: நகராட்சிகளில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மறு சீராய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியை நிலுவைத் தொகையை கணக்கிடாமல், நடப்பு ஆண்டிற்கு உரிய வரியை மட்டும் வசூலிக்குமாறு நகராட்சி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டது. 
    இருப்பினும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை செலுத்துவதற்கு கட்டட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 2018 ஆண்டு கணக்கு முடிவை முன்னிட்டு நகராட்சிகளில் சொத்து வரி வசூலுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
    இலக்கை எட்டுமா? இதனால், நகராட்சிகளில் கடந்த ஆண்டுகளைப் போல 2018, மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து வரி வசூலில் நிர்ணயித்த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் 100 சதவிகிதம் சொத்து வரி வசூல் செய்து வரும் தேனி அல்லிநகரம், கம்பம் ஆகிய நகராட்சிகளிலும், இந்த ஆண்டில் இதுவரை 90 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
    மேல்முறையீடு செய்யலாம்: இது குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ராஜாராம் கூறியது: தேனி அல்லிநகரம் நகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. மறு சீராய்வின் அடிப்படையில், கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின்பு விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடங்களுக்கும், புதிய கட்டடங்களுக்கும் அதன் பரப்பளவிற்கு ஏற்ப வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கட்டடத்தை அளவீடு செய்ததில் வித்தியாசம் மற்றும் ஆட்சேபம் இருந்தால், சொத்து வரியை செலுத்தி விட்டு மேல்முறையீடு செய்யலாம்.
     நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai