தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சனிக்கிழமை இருதரப்பினர் மோதிக்கொண்டதில் வீடுகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 20 பேரை ஜெயமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் ஏப்ரல் 24 ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி இறந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலம் சென்றபோது, மற்றொரு தரப்பினர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால் இறுதி ஊர்வலத்தை மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்லுமாறு தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த முஸ்தபா என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது 15 க்கு மேற்பட்ட வீடுகள், ஒரு கார், இரண்டு பைக் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இருதரப்பினர் மோதிக்கொண்டதில், 10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சினையில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல்குமார் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.