Enable Javscript for better performance
கம்பம் பகுதியில் பரவுகிறது கண்நோய்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் "மெட்ராஸ் - ஐ' எனப்படும் கண் நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. 
    கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது "மெட்ராஸ் - ஐ' என்ற
     கண் நோய் வேகமாக பரவி வருகிறது. சாலைகளில் நடக்கும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கறுப்பு கண்ணாடி அணிந்து செல்கின்றனர். கோடை வெயில் மற்றும் மழை பெய்வதால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால்  கண் நோய் பரவுவதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    இதுகுறித்து கண் நோய் மருத்துவர் கூறியது: கண்களின் 
    வெளிசவ்வு அழற்சியே, "மெட்ராஸ்-ஐ'  எனப்படுகிறது. அடினோ என்னும்  ஒரு வகை வைரஸ் பருவநிலை மாறுபாடு காலங்களில், வெப்பம் மற்றும்  ஈரப்பதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது,  நோய் பாதித்தவர்களுக்கு கண்கள்  சிவப்பாக இருக்கும், நீர் வடியும், உறுத்தல் இருக்கும்.
     கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பர வாய்ப்புகள் அதிகம்.  கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது  அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் நோய் எளிதாக பரவும்.  கண் நோய் பாதித்தவர்கள்  பயன்படுத்திய படுக்கை, துண்டு போன்றவைகளை குடும்பத்தில் உள்ள, மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. 
    "மெட்ராஸ்-ஐ'  பெரும்பாலும் 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். 
    இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால்  கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தை பொறுத்து பரிந்துரைக்கும் மருந்து, கண்ணுக்கு சற்று இதமளிக்கும். கறுப்பு கண்ணாடி அணிந்தால் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கலாம். 
    அடிக்கடி குளிர்ந்த நீரில்  கண்களை கழுவ, துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி, கம்ப்யூட்டர் பார்த்தோ,  அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களுக்கு வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai