தேனியில் கழிவு நீரோடையாக மாறிய ராஜ வாய்க்கால்

தேனியில் தேனியாறு என்று அழைக்கப்படும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவுநீரோடையாக மாறியுள்ளது.

தேனியில் தேனியாறு என்று அழைக்கப்படும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவுநீரோடையாக மாறியுள்ளது.
தேனியில் கொட்டகுடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீர், 2.8 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்குச் சென்றடைகிறது.
மீறு சமுத்திரம் கண்மாயில் இருந்து மறுகால் பாயும் தண்ணீர், பெரியகுளம், மதுரை சாலைகளில் மழைநீர் வடிகால் மூலம் வரும் தண்ணீர் ஆகியவை தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே ராஜவாய்க்காலில் சேர்கிறது.
தேனி நகராட்சி  பழைய பேருந்து நிலையத்தில் ராஜவாய்க்காலின் சுரங்க கால்வாயில் மண்மேவி அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப் பகுதியில் இருந்து ராஜவாய்க்காலின் வழித்தடம் மாற்றப்பட்டு கொட்டகுடி ஆற்றின் அருகே திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால், நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள சுப்பன்தெரு, சோலைமலை அய்யனார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ராஜவாய்க்கால் தண்ணீர் வரத்தின்றி புதர் மண்டிக் காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும் என சுப்பன்தெரு, சோலைமலை அய்யனார் கோயில் தெரு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மஞ்சளாறு வடிநில உபகோட்டப் பொறியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது:
தேனியில் நகர மயமாக்குதலினால் ராஜவாய்க்கால் பாசன பயன்பாட்டில் இல்லை. தற்போது கழிவு நீரோடையாக உள்ள ராஜவாய்க்கால் பொதுப் பணித்துறையின் பராமரிப்பில் இல்லை. ராஜவாய்க்காலின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை கண்டறிந்து அகற்றுமாறு மஞ்சளாறு வடிநில உப கோட்டம் சார்பில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேனி வட்டாட்சியருக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கழிவு நீரோடையாக உள்ள ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி தண்ணீர் செல்ல வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்தினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com