ஹைவேவிஸ் - மேகமலையில் பலத்த மழை: கிராமத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஹைவேவிஸ் - மேகமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஹைவேவிஸ் - மேகமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக, ஓடைப்பட்டி ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. 
ஹைவேவிஸ் - மேகமலைப் பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான குன்றுகள் மூலமாகவே மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இப்பகுதியில் ஆண்டுக்கு  8 மாதங்கள் மழைப்பொழிவு இருக்கும். பருவமழைக் காலங்களில் கனமழை பெய்யும். இப் பகுதியில் பெய்யும் மழை நீரை சேமிக்கும் வகையில், மலையின் அடிவாரப் பகுதியான ஓடைப்பட்டி, எரசக்கநாயக்கனூர், வெள்ளையம்மாள்புரம், அப்பிபட்டி என 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 20 -க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு மழைநீர் சென்று சேருகிறது.
ஆனால், தற்போது ஹைவேவிஸ் - மேகமலையில் பெய்யும் மழைநீர் செல்லும் வகையில் இயற்கையாகவே இருந்த நீர்வழிப் பாதைகளான ஓடைகள், 
நீர்நிலைகள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 
இதனால், பருவமழைக் காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க முடியாத நிலையில், கனமழைக் காலங்களில் இதுபோன்று வெள்ளநீர்  ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, ஓடைப்பட்டி கிராமத்துக்குள் வெள்ளநீர் புகுந்து விட்டது.  நீர்வரத்து அதிகளவு இருந்ததால், தாழ்வான வீடுகளுக்குள்ளும்  வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மணல், செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை முற்றிலுமாக அழித்துவிட்டனர். ஓடைகள், கண்மாய்களை ஆக்கிரப்பு செய்துள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி ஊருக்குள் புகுந்துவிட்டது.  
எனவே, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஓடைகள், கண்மாய்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com