ஆண்டிபட்டி அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம்: கட்டடங்களை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

ஆண்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

ஆண்டிபட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே உடனடியாக கட்டடங்களை  சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளிக் கட்டடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்பிறகு பள்ளியில்  3 புதிய கட்டடங்கள்  கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 26 ஆம் தேதி),  இப்பள்ளியின் இடதுபுறத்திலிருந்த பழைய கட்டடத்தின் முன்புறம் உள்ள மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. விடுமுறை நாளில் இடிந்து விழுந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.  தற்போது அக்கட்டடத்தில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். மேலும் மற்ற  கட்டடங்களும் பல இடங்களிலும் விரிசலுடன், இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்களை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
 இதுகுறித்து ஆண்டிபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகஜோதி வெள்ளிக்கிழமை கூறியது: பள்ளிக் கட்டடத்தின் முன்புற மேற்கூரை இடிந்த தகவல் அறிந்தவுடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். இதுகுறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கல்வி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com