தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.


தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
தேனியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: கர்நாடகாவில் தமிழகத்திற்கு விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அணை கட்டுவதற்கு மண் மற்றும் மணல் விற்பனை செய்வது, தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் தான் என்று தெரியவந்துள்ளது.  இதுகுறித்து என் மீது வழக்கு போட்டால் உரிய ஆதாரங்களை தரத் தயாராக இருக்கிறேன். 
தேனி அருகே நடைபெற்ற பிரதமர் நரேந்திரமோடியின் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்கள் பணம் கொடுத்து, வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இந்தப் பேருந்துகளுக்கு முறையான உரிமம் இல்லை. இதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் விசாரிப்பதில்லை.
அந்தக் கூட்டத்தில் என்னைப் பற்றி பேசிய நரேந்திரமோடி, தேனி மக்களவைத் தொகுதிக்கு வெளியூரில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த இவர், உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடலாமா? ஆண்டிபட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிடவில்லையா? 
இந்த மாநிலத்தைச் சேர்ந்தவன், இந்த இனத்தைச் சேர்ந்தவன், இந்த மொழி பேசுபவன் என்பது தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் செயல். 
வாரிசு அரசியலை ஒழிப்போம், குடும்ப அரசியலை ஒழிப்போம் என்று தேனியில் அவர் பேசியிருப்பது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டுச் சொன்னது போல இருக்கிறது. கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவேன், காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைப்பேன் என்று ராகுல் காந்தி பேசியதாக நரேந்திரமோடி குறிப்பிடுவது பொய் பிரசாரம். கர்நாடக மாநில காங்கிரஸ் அவ்வாறு சொல்லலாம். இரு மாநில பிரச்னையில் ராகுல் காந்தி அப்படி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.  மாநிலங்களின் உரிமைகளில் தேசிய காங்கிரஸ் கமிட்டி ஒரு தரப்பாக தலையிடுவது இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.  தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் புகார் மீது விசாரணை கூட நடைபெறுவதில்லை. தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பண சுனாமி மக்களைத் தாக்கியுள்ளது. 
மக்கள் சக்தி ஆதரவுடன் இதை சமாளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com